ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் தாயாருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்

பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி : கோப்புப்படம்
பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷான் நசீரை, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருமாறு அமலாக்கப்பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் மனைவி குல்ஷான் நசீர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதி குல்ஷான் நசீர் அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அமலாக்கப்பிரிவு முன் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அதன்பின் மெகபூபா முப்தி நிருபர்களிடம் கூறுகையில் “ என்ஐஏ, சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை இந்த விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ மெகபூபா முப்தி, அவரின் தாயாருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மன் என்பது அரசியல் பழிவாங்கல். காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் மெகபூபா முப்தியின் குரலை நசுக்குவதற்கான முயற்சி. ஆனால், அதில் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள்” எனத் தெரிவி்த்தார்.

சமீபத்தில் மெகபூபா முப்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கப்பிரிவு நடத்திய சோதனையில் இரு டைரிகள் கிடைத்தன. அந்த டைரியில் குறிப்பிட்டுள்ள விவரங்களில் மெகபூபா முப்திக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.

இந்த பணம் அனைத்தும் முதல்வராக மெகபூபா இருந்த காலத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் சில லட்சம் ரூபாய்கள், மெகபூபா முப்தியின் தாயார், குல்ஷான் நசீர் வங்கிக்கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in