

தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) ஆர்வலரை தாக்கியதுடன் அவரது முகத்தில் மை வீசிய தனது தொண்டர்களை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளது சிவசேனா.
இதுகுறித்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே கூறும்போது, “லத்தூரில் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். இந்த அவமானகரமான செயலை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்தவர் மல்லிகார் ஜுன் பாய்கட்டி. லத்தூர் நாந்தெட் சாலையில், ஒரு கல்வி நிறுவனம் சார்பில் 14 ஆயிரம் சதுர அடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் நான்கு மாடி கட்டிடம் பற்றிய தகவலை ஆர்டிஐ சட்டம் மூலம் கேட்டுப் பெற்றார்.
நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து, இதுதொடர் பான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மல்லி கார்ஜுன் பாய்கட்டி. இதனால் ஆத்திரம் அடைந்த உள்ளூர் சிவசேனா தொண்டர்கள், அவரை அப்பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்துக்கு இழுத்துச்சென்று சுமார் 4,000 மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக தாக்கியதுடன், முகத்தில் கருப்பு மை பூசினர். இதையடுத்து அவர் லத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரியின் புத்தக வெளியீட்டு விழாவை மும்பையில் நடத்த ஏற்பாடு செய்ததற்காக அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் தலைவர் சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு நபர் மீது அக்கட்சி தொண்டர்கள் அதே பாணியில் தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.