

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அக்கூட்டத்தில் பேசிய பிரதமர், மீண்டும் சவாலான சூழ்நிலை; கரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பிரதமர் பேசியதாவது:
நாம் இப்போது மீண்டும் சவாலான சூழ்நிலையில் உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாவது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைமை. ஆனால் பொதுமக்களோ மிகவும் சகஜமாக உள்ளனர்.
மாநில அரசுகள் கடுமையாக தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் 1.26 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் மாநில அரசுகள் கட்டப்பாட்டு பகுதிகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
இரவு நேர ஊரடங்கைக் கடைபிடிக்கலாம். இரவு நேர ஊரடங்கு உலகளவில் ஏற்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையாகிவிட்டது. இரவு ஊரடங்கால் தொழிலும் பெரிதும் பாதிக்காது.
கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். 70% ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. கூடுதல் பரிசோதனையால் தொற்று எண்ணிக்கை அதிகமாக வருமே என்ற அச்சம் வேண்டாம். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத்தாலும் கரோனா பரிசோதனையை நிறுத்த வேண்டாம்.
கரோனா பரிசோதனை மாதிரிகளை சரியாக சேகரிப்பது மிகவும் முக்கியம். தொற்று கண்டறிதலும், கண்காணித்தலுமே வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகள். நாம் இப்போது தடுப்பூசி பணியை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம். கரோனா பரிசோதனை செய்து, தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துதல், அந்தப் பகுதிகளை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக்கி கண்காணித்தல் ஆகியவை மிகவும் முக்கியம்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில் எவ்வித சமரசமும் செய்ய வேண்டாம். தனிநபர்களுக்கான கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசியைப் பொறுத்தவரை எந்தெந்த மாநிலங்களில் அதிக தேவை இருக்கிறதோ அதற்கேற்ப அவற்றை விநியோகிக்க வேண்டும். ஒரே மாநிலத்தில் தடுப்பூசிகளைத் தேக்கிவைத்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
ஏப்ரல் 11 முதல் 14ம் தேதிவரை தடுப்பூசித் திருவிழா நடத்தி, தகுதியானவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகள் கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மீண்டும் பெரியளவில் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.