

கேரள முதல்வர் பினராயி விஜயன் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா 2-வது அலை பாதி்ப்பு இன்னும் குறையவில்லை. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் அறிக்கையின்படி, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா 2-வது இடத்தில் இருக்கிறது. தீவிரமாக இருந்த பாதிப்பு கடந்த சில வாரங்களாகத்தான் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் வீணா விஜயனின் கணவர் முகமது ரியாஸுக்ுகம் கரோனா தொற்று உறுதியானது. சட்டப்பேரவைத் தேர்தலில் பேபூர் தொகுதியல் ரியாஸ் போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவு அன்று இருவரும் கவசஉடை அணிந்துவந்து வாக்குச் செலுத்தினர்.
இந்நிலையில் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதல்வர் பினராயி விஜயனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்ணூரில் உள்ள இல்லத்தில் பினராயி விஜயன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.