

தேர்வு நேரத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதுபோல், பெட்ரோல், டீசல் விலை உயரும் போது ஏன் பிரதமர் மோடி ஏதும் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும். 4-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நேற்று நடந்தது.
இந்நிலையில் மாணவர்களுடன் தேர்வு நேரத்தில் கலந்துரையாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வின்போது மவுனமாக இருப்பது ஏன், மாணவர்களின்தேர்வை விட, ஒரு வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவது எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட்டில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசின் வரிவசூலால், ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 9-வது நாளாகத் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் 3 முறை மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. பெட்ரோல் மீது லிட்டருக்கு 61 பைசாவும், டீசல் மீது 60 பைசாவும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.