Last Updated : 08 Apr, 2021 01:19 PM

 

Published : 08 Apr 2021 01:19 PM
Last Updated : 08 Apr 2021 01:19 PM

மேற்கு வங்க தேர்தலில் பிரச்சாரம் செய்யாத ராகுல், பிரியங்கா: கேள்விக்குறியான காங்கிரஸின் நடவடிக்கைகள்

புதுடெல்லி

மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வத்ராவும் இதுவரை பிரச்சாரம் செய்யவில்லை. இதனால், அக்கட்சி இடம்பெற்ற கூட்டணியில் காங்கிரஸ் நடவடிக்கையில் கேள்விக்குறியாகி வருகின்றன.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்தே போட்டியிடுகின்றன. இங்கு சுமார் 34 வருடம் ஆட்சி செய்த இடதுசாரிகளை காங்கிரஸ் எதிர்த்து வந்தது.

தற்போது சூழல் மாறி, இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் புதிதாகத் துவக்கப்பட்ட முஸ்லிம் கட்சியான இந்திய மதசார்பற்ற முன்னணியும்(ஐஎஸ்எப்) இடம் பெற்றுள்ளது.

எனினும், இங்கு திரிணமூல் மற்றும் பாஜவிற்கு இடையில் மட்டுமே முக்கியப் போட்டி நிலவுகிறது. இப்போட்டியிலிருந்து இடதுசாரி கூட்டணி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு காங்கிரஸே காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.

இதற்கு அம்மாநிலத்தின் முதல் மூன்று கட்ட தேர்தலுக்கும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் எவரும் பிரச்சாரம் செய்ய வராததது காரணமாகி விட்டது. அருகிலுள்ள அசாம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்த ராகுலும், பிரியங்காவும் இங்கு எட்டிப்பார்க்கவும் இல்லை.

இரண்டாவது கட்ட தேர்தலில் திரிணமூலின் தலைவரும் முதல்வருமான மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் வாக்குப்பதிவு இருந்தது. இங்கு கூட பிரச்சாரம் செய்யாததால், காங்கிரஸின் கூட்டணி நிலைப்பாடு கேள்விக்குறியாகி விட்டது

‘மம்தாவின் ஆட்சிக்கு மாற்றான கூட்டணி எனக் கூறிவிட்டு காங்கிரஸ் பிரச்சாரத்தில் தீவிர காட்டாதது ஏன்?’ என ஐஎஸ்எப்பின் தலைவரான பீர்ஜாதா அப்பாஸ் சித்திக்கீ காங்கிரஸ் மீது வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு இடதுசாரி தலைவர்கள், ‘அதற்கானப் பதிலை காங்கிரஸ் தான் கூற வேண்டும்’ என சிரித்தபடி பதில் தருகின்றனர். எனினும், காங்கிரஸிடமிருந்து அதிகாரபூர்வமானப் பதில் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு மத்தியில் ஆட்சி அமைப்பதே எங்கள் முக்கியக் குறி.

மாநிலங்களில் ஆட்சி அமைப்பதை நாம் இரண்டாம் பட்சமாகவே வைத்துள்ளோம். ஏனெனில், வரும் காலங்களில் ராகுல் பிரதமராக திரிணமூல் போன்ற பிராந்திய, மாநிலக்கட்சிகள் ஆதரவு தேவைப்படலாம்.

இதற்காகவே மம்தா போன்றவர்களுக்கு காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவளிக்க வேண்டி உள்ளது. இத்துடன் இடதுசாரிகளை கேரளாவில் மட்டும் எதிர்ப்பதும் எங்களுக்கு பிரச்சனைதான்’’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிகத்துடன் சேர்த்து கேரளா சட்டப்பேரவை தேர்தலும் ஏப்ரல் 6 இல் முடிந்துளது. எனவே, ராகுலும், பிரியங்காவும் பிரச்சாரத்திற்கு வரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இரட்டை நிலைபாடு

இதற்கு மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கேரளாவில் கடுமையாக எதிர்க்கிறது. இந்த இரட்டை நிலைப்பாட்டு சூழலில் அக்கட்சியின் பிரச்சாரம் மேற்கு வங்கவாசிகள் இடையே எடுபடாது என்ற அச்சமும் காங்கிரஸிடம் நிலவுகிறது.

மெகா கூட்டணியில் காங்கிரஸ்

இதுபோல் தமக்கு கூட்டணிகளில் போட்டியிடும் வாய்ப்புகளை நழுவ விடுவது காங்கிரஸுக்கு புதிதல்ல. கடந்த வருடம் முடிந்த பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் மெகா கூட்டணியில் அக்கட்சி இருந்தது.

ஆர்வம் குறைந்த பிரச்சாரம்

அதற்கு மிக அதிகமாக 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் அதில் மிகக் குறைவான 19 இல் மட்டும் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்தது. இதற்கு பிஹாரில் காங்கிரஸ் காட்டிய ஆர்வம் குறைந்த பிரச்சாரம் காரணம் எனப் புகார் எழுந்தது.

திமுகவில் குறைந்த தொகுதிகள்

இக்கட்சியின் தவறான நடவடிக்கையினாலேயே தாம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜகவிடம் இழந்ததாக லாலுவின் மகன் தேஜஸ்வீ குறை கூறி இருந்தார். இதனால்தான் திமுக கூட்டணியிலும் காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

சமாஜ்வாதியுடன் கூட்டு

இதற்கும் முன்பாக, 2017 இல் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. இதில், காங்கிரஸ் தனித்து போட்டியில் கிடைத்ததை விட மிகக்குறைவாக வெறும் ஏழு தொகுதிகள் கிடைத்தன.

காங்கிரஸ் மீது அகிலேஷின் புகார்

பிஹாரை போல் உபியிலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், தாம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால் பாஜகவிடம் ஆட்சியை இழந்ததாக புகார் கூறி இருந்தார். அடுத்து 2019 இல் வந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸை கழட்டி விட்டவர் தனது முக்கிய எதிரியான மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்தார்.

மம்தாவிற்கு ஆதரவளிக்காத காங்கிரஸ்

அகிலேஷ், மாயாவதியை போல், மேற்கு வங்கத்தில் பாஜகவிடமிருந்து தன் ஆட்சியை காக்கத் தீவிரம் காட்டுகிறார் முதல்வர் மம்தா. ஆனால், பாஜகவை எதிர்க்க மம்தாவுடன் கூட்டணி வைத்து வலுப்படுத்தவும் காங்கிரஸ் முன்வராதது அம்மாநிலவாசிகள் இடையேயும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x