

அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார் என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசியை 18 வயதினருக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்துவதைப் பரவலாக்க வேண்டும் என ஐஎம்ஏ பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் மத்திய அரசுக்கு இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்தான் தற்போது கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரஜெயின் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இரு கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். முதலாவதாக, பதின்வயதினர் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியைச் செலுத்த அனுமதிக்க வேண்டும். இரண்டாவதாக, மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி செலுத்தாமல், தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராட வேண்டும். டெல்லியில் சுகாதாரப் பணியாளர்களுக்குக் குறைந்த அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். குறைந்த அளவே மத்திய அரசுக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது பெரிய விஷயம் அல்ல. இனிவரும் காலங்களில் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதில் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மனோகர் அக்னானி, பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து அதை வேகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அரசு மருத்துவமனைகளில் 30 முதல் 40 சதவீதம் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் இன்னும் 4 முதல் 5 நாட்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி இருப்பு இருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் முகாம் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் கூடுதலாகத் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டுள்ளோம்''.
இவ்வாறு சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார்.