கரோனா பரவல்; மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என தகவல்

கரோனா பரவல்; மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை என தகவல்
Updated on
1 min read

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆனால் இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் கரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்து வேண்டும், மக்களுக்கு கரோனா ஆர்டிபிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைப் போடவும் மத்திய அரசு அறிவுறுத்தி, அதை வேகப்படுத்தவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்து வருவது குறித்தும், கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்தும் அறிய பிரதமர் மோடி சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக தலைமைச் செயலாளர் ஆல்பன் பண்டாபாத்யாயா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. மேற்குவங்கத்தில் 4-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜக தலைவர்களும் பதிலுக்கு மம்தா பானர்ஜியை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in