

பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவ சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட தடுப்பூசி பணி மார்ச் 1ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நபராக பிரதமர் மோடி தனது முதல் தவணை ஊசியைப் போட்டுக் கொண்டார்.
37 நாட்களுக்குப் பின்னர் இன்று அவர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி நிவேதா அவருடைய கைகளைப் பிடித்துக் கொள்ள செவிலி நிஷா சர்மா 2ம் டோஸ் தடுபூசியை செலுத்தினார். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பிரதமர் மோடி உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் அழைப்பு:
தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். கரோனா வைரஸை எதிர்கொள்வதில் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் ஒரு முக்கிய வழி. ஆகையால், உங்களுக்குத் தடுப்பூசி பெறுவதற்கான தகுதி இருந்தால் உடனே போட்டுக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதனை, கோவின் இணையதளத்திலும் பகிர்ந்திருந்தார். கரோனா தடுப்பூசி போட விரும்புவர்கள் பதிவு செய்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டது கோவின் இணையதளம்.
அனைவருக்கும் தடுப்பூசி; கோரிக்கை வைக்கும் ராகுல்:
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. தற்போது 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் தேவையுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள் என்ற பேச்சு அபத்தமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.