Last Updated : 08 Apr, 2021 03:12 AM

 

Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கர்நாடகாவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: அரசு பேருந்துகள் இயங்காததால் ப‌யணிகள் அவதி

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய‌ உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேற்று பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாயின‌ர்.

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களாக நியமனம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த‌‌ போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர். வெளியூர் பயணிகள், பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என ஏராளமானோர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்துகள் இயங்காத சூழலை பயன்படுத்திக்கொண்டு தனியார் பேருந்து, ஆட்டோ, கால் டாக்சி ஆகியவை கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனிடையே மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருந்த 42 வயதான மாற்று திறனாளி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் போக்குவரத்துத்துறையை கவனிக்கும் துணை முதல்வர் லட்சுமண் சவதி நேற்றுஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லட்சுமண் சவதி கூறும்போது, "விரைவில் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தற்போது கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஊதிய உயர்வு குறித்த முடிவை அறிவிக்க முடியாது. எனவே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட முடிவை கைவிட வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஊழியர்கள் தரப்பு ஏற்க மறுத்துவிட்டது.

இதனிடையே முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ''கரோனா காலத்தில் அரசு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஊழியர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே போக்குவரத்து நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்தப் போராட்டம் மேலும் இழப்பையே ஏற்படுத்தும். பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளதால் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிடில் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பேருந்துகள் இயங்காத‌ நிலையில் அதிகளவில் தனியார் பேருந்துகள், சிறப்பு ரயில்கள், மெட்ரோ ரெயில் ஆகியவை அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x