

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரின்போது கடத்திய கோப்ரா படை வீரரின் புகைப் படத்தை மாவோயிஸ்ட் அமைப்பு நேற்று வெளியிட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர்-சுக்மா மாவட்ட வனப்பகுதியில் கடந்த 3-ம் தேதி தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப் புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் நவீன ஆயுதங்களால் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 22 வீரர்கள் கொல்லப் பட்டனர். கோப்ரா படையைச் சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனார். அவரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் விகல்ப் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “என்கவுன்ட்டர் நடந்தபோது ராகேஷ்வர் சிங்கை சிறை பிடித்தோம். அவர் எங்கள் கட்டுப்பாட்டில் பத்திரமாக உள்ளார். அவரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவினரின் பெயரை அரசு அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
உண்மை தன்மை குறித்து ஆய்வு
இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக பஸ்தார் மண்டல காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் ராகேஷ்வர் சிங் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை மாவோயிஸ்ட் அமைப்பினர் நேற்று வெளியிட்டனர். ஆனால் அவருக்கு எந்த காயமும் இல்லை என்பதால், இது பழைய படமாக இருக்கலாம் என சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.