Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

ராணுவத்தில் 20 வயதில் கணவர் மரணம்: 72 ஆண்டுக்கு பிறகு மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதி

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ககன் சிங். வயது 20. கடந்த 1946-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய மனைவி பரூலி தேவிக்கு அப்போது வயது 12. ராணுவத்தின் குமாவ்ன் ரெஜிமென்ட்டில் பணியாற்றினார் ககன் சிங். கடந்த 1952-ம் ஆண்டு திடீரென ககன் சிங் இறந்துவிட்டார். அவர் எதற்காக தன்னையே அழித்துக் கொண்டார் என்று அந்த சிறிய வயதில் பரூலி தேவிக்கு தெரியவில்லை. பின்னர் ககன் சிங்கின் சகோதரர்கள் வசிக்கும் லிந்துரா கிராமத்துக்கு சென்று விட்டார்.

இருவருக்கும் திருமணமாகி 2 மாதங்கள்தான் ஆகியிருந்தன. அதன்பின் காலங்கள் உருண்டோடின. ஆனால், ராணுவத்தில் உயிரிழந்த வீரரின் மனைவிக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

ராணுவத்தில் போரிலோ அல்லது தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது ஏற்பட்ட மோதலிலோ அல்லது இயற்கை யாகவோ மரணம் அடைந்தால் மட்டுமே கணவனை இழந்த மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று கூறி பரூலி தேவிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.

இதுகுறித்து கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உறவினர் கவேந்திரா லுந்தி கூறியதாவது:

பரூலி தேவிக்கு ராணுவத்தின் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பிதோரகர் பகுதியில் இருந்து ஏராளமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தாருக்கு ராணுவத்திடம் இருந்து கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் எதுவும் தெரிவதில்லை.

எனவே, எனது ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன். பரூலிக்கு ஓய்வூதியம் கேட்டு கடந்த 2014-ம் ஆண்டுஎனது முயற்சியை தொடங்கினேன். ஆனால், போரிலோ, இயற்கையாகவோ அவரது கணவர் இறக்கவில்லை. அந்த நேரத்தில்தான் போரில் உயிரிழந்த வீரர்களின் மனைவிக்கு மட்டும்தான் ஓய்வூதியம் என்ற விதிமுறையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு பெண் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் 1985-ம் ஆண்டு பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

அதன்பின் பரூலி தேவி விவகாரத்தை ராணுவத்தின் கணக்கு தணிக்குத் துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். 7 ஆண்டு போராட்டத்துக்கு பலனாக குமாவ்ன் ரெஜிமென்ட் மையம் பரூலி தேவியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

தற்போது பரூலி தேவிக்கு மாதம் ரூ.11,700 ஓய்வூதியம் கிடைக்கும். அத்துடன் கடந்த 1977-ம் ஆண்டு முதல் இதுவரை உள்ள நிலுவை தொகை ரூ.20 லட்சம் கிடைக்கும்.

இவ்வாறு கவேந்திரா கூறினார்.

தற்போது 82 வயதாகும் பரூலிதேவி கூறும்போது, ‘‘இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. என் கணவரை ராணுவ பணியின் போது இழந்த தற்கான அங்கீகாரம். தற்போது அது கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x