

ஹர்திக் படேல் மீதான தேச துரோக வழக்கு விசாரணையை, அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
குஜராத்தில் படேல் சமூகத் தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, ஹர்திக் படேல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இவர் மீது குஜராத் போலீஸார் சார்பில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஹர்திக் படேல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட் டிருந்தது.
இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஹர்திக் படேல் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடியாது என, தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. எனினும், அவர் நிவாரணம் பெற வசதியாக, வேறு அமர்வுக்கு விசாரணையை மாற்றியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேஹர் மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு முன், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ஹர்திக் படேல் மீதான தேச துரோக வழக்கு விசாரணையை ஒன்றரை மாதங்களுக்குள் முடித்து, சீலிடப்பட்ட கவரில், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணையை, அடுத்த ஆண்டு ஜனவரி, 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, குஜராத் போலீஸார் தாக்கல் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.