

நீதிபதிகளை நியமிக்க எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமனக் குழு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, இதுவரை நீதிபதிகளை தேர்வு செய்ய உள்ள ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, மூத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இக்கருத்துகளை தொகுத்து சமர்ப்பிக்கும் பொறுப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 3000-க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை அவர்கள் தொகுத்து சமர்ப்பித்துள்ளனர். இதில், பெரும்பான்மை கருத்துகள் நீதிபதிகள் நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டுமென்றால் பொதுமக்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதேபோன்று நீதிபதிகளுக்கும் நடைமுறை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஒதுக்கீடு
நீதிபதிகள் நியமனத்தில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய நீதித்துறை தேர்வு முறையை வலுப்படுத்த வேண்டும். நீதிபதிகள் நியமனத்துக்கென தனி தலைமைச்செயலகம் உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நீதித்துறை அதிகாரிகள் அல்லது 10 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற வழக்கறிஞர்களை பரிசீலிக்க வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக இன்றும் நாளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.