அரசு, தனியார் அலுவலகங்களிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம்: மத்திய அரசு அனுமதி

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன்: கோப்புப் படம்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன்: கோப்புப் படம்.
Updated on
1 min read

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 100 தகுதியான பயனாளிகள், விருப்பமுள்ளவர்கள் இருந்தால் அங்கு தடுப்பூசி முகாமை வரும் 11-ம் தேதி முதல் நடத்த மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முகாம் வரும் 11-ம் தேதி தொடங்கப்படும் என்பதால், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அடுத்துடுத்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், கடந்த 2 நாட்களுக்குள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், மத்திய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த கரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று மத்திய அரசு கூறியிருப்பதால், தடுப்பூசி போடும் வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவருக்கும் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகுதியுள்ள வயதினர் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தாலும் அவர்களுக்கும் முகாம் அமைத்துத் தடுப்பூசி செலுத்தலாம்.

தகுதியான வயதுள்ள, விருப்பமுள்ள 100 ஊழியர்கள் அமைப்பு சார்ந்த துறையில் முறையான அலுவலகங்களில் இருந்தால், தனியார், மற்றும் அரசு அலுவலகங்களிலும், உற்பத்தி துறை நிறுவனங்கள் (தொழிற்சாலை), சேவைத்துறை நிறுவனங்களிலும் தடுப்பூசி முகாம்களை வரும் 11-ம் தேதி முதல் நடத்தலாம்.

அதேசமயம் வயது வரம்பில் மாற்றமில்லை. 45 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி முகாமில் பயன்பெற வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரேதசங்களும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் கலந்தாய்வு செய்து, தடுப்பூசி முகாமைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்தத் தடுப்பூசி முகாம் வரும் 11-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும்''.

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in