

வேளாண் சட்டங்கள், மானியங்கள் நேரடி பரிமாற்றம் போன்றவை ஒருதலைபட்சமான முடிவுகள் என்றும் அந்த வகையில் மாநில அரசுகளுக்கான உரிமைகளை மத்திய அரசு திட்டமிட்டுப் பறித்து வருகிறது என்றும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயி களுக்கு எதிரானதாகவும் பெரு நிறுவனஙகளுக்கு ஆதரவாகவும் இருக்கிறது என வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
மத்திய அரசு அனைத்து விவகாரங்களிலும் மாநில அரசு களை கலந்தாலோசிக்காமல் தன்னிச் சையாக முடிவெடுத்து வரு கிறது என்றும் மேலும், மாநிலங்களின் அடிப்படை உரிமையைப் பறித்து வருகிறது என்றும் பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் தொடர்பான கண்காட்சியைத் தொடங்கி வைத்த அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங், ‘தேசிய உணவு தானியக் கிடங்குக்கு பஞ்சாப் மாநிலம் மட்டும் 40 சதவீதம் அளவில் பங்களிக்கிறது.
ஆனால் வேளாண் சட்டங்கள்தொடர்பாக மத்திய அரசு பஞ்சாப் அரசை கலந்தாலோசிக்க வில்லை’ என குற்றம்சாட்டினார். மேலும் அவர், ‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி வேளாண் துறைமாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது. உண்மையில் மத்திய அரசுக்கு விவசாயிகளின்நலன்களில் அக்கறை இருக்கும்பட்சத்தில் அது மாநில அரசையோ,மாநில விவசாயிகளையோ கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண் துறையை சார்ந்திருக்கிறது. பஞ்சாபை பொறுத்தவரை விவசாயிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே நூற்றாண்டுக்கு மேலானஉறவு இருக்கிறது. மத்திய அரசோ சீர்திருத்தம் என்ற பெயரில், சிறப்பான இந்த உறவை, அமைப்பை அழிக்க முற்படுகிறது. மத்திய அரசு திட்டமிட்டு மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்ப்பதாக இருக்கிறது’ என்று கூறினார்.
144 பேர் உயிரிழப்பு
மத்திய அரசு விவசாயிகளின் வலியை உணராமல் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 144 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், ஒருவருக்கு அரசுவேலையும் பஞ்சாப் மாநில அரசு வழங்குவதாகவும் தெரிவித்தார்.