Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஹெலிகாப்டர் ஆசையை நிறைவேற்றிய ராகுல்

கோழிக்கோடு விமான நிலையத்தில், ஹெலிகாப்டரில் விமானிகள் அமரும் காக்பிட் பகுதியை சிறுவன் அத்வைத்துக்கு காட்டிய ராகுல். அருகில் பெண் விமானி.

புதுடெல்லி

பைலட் ஆக விரும்பும் 9 வயது சிறுவனின் ஹெலிகாப்டர் ஆசையை காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றினார். தனது ஹெலிகாப்டருக்கு சிறுவனை அழைத்து விமானி அமரும் காக்பிட் பகுதியை காட்டினார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமையன்று கண்ணூர் மாவட்டத்தில் ஒரு டீக்கடையில் அத்வைத் என்ற சிறுவனைப் பார்த்தார். அவனிடம் பேசினார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் சரளமாகப் பேசிய சிறுவனை ராகுலுக்குப் பிடித்துப் போனது. எதிர்காலத்தில் வளர்ந்து என்னவாகப் போகிறாய்? என்று ராகுல் கேட்டதற்கு, விமான பைலட் ஆக விரும்புகிறேன் என்று அத்வைத் தெரிவித்தான்.

மேலும், ஹெலிகாப்டரை நெருக்கமாக பார்த்தது இல்லை என்றும் கூறினான். சிறுவன் அத்வைத்தின் விருப்பத்தை நிறை வேற்ற முடிவு செய்த ராகுல் காந்தி மறுநாளே கோழிக்கோடு விமான நிலையத்தில் தான்பயணம் செய்யும் ஹெலிகாப்டருக்கு சிறுவன் அத்வைத்தை வரவழைத்தார். தனது ஹெலிகாப்டரின் உள்பகுதியை சிறுவனுக்கு காண்பித்தார். விமானிகள் அமரும் காக்பிட் பகுதியை ராகுலும்பெண் விமானியும் சிறுவன் அத்வைத்துக்கு காட்டி விளக்கினர்.

இந்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘சிறுவன் அத்வைத்தின் கனவை நனவாக்க முதல் படி எடுத்து வைத்துள்ளோம். இப்போது, ஒரு சமூகத்தையும் கட்டமைப்பையும் உருவாக்க வேண்டியது நமதுகடமை. அதுவே அந்த சிறுவனுக்கு பறப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்கும்’’ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

1.6 லட்சம் பேர்

நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதை 1.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலர் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x