

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரிக்க புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
கரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் கணொலிக் காட்சி மூலம் ராஜ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்தாக்கரே கூறியதாவது:
இந்தியாவிலேயே மகாராஷ்டிராதான் அதிக அளவில் தொழில்மயமான மாநிலம். இதனால், மகாராஷ்டிராவில் பணியாற்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் போதுமான அளவுக்கு கரோனா சோதனை வசதிகள் இல்லை.
மகாராஷ்டிராவில் கரோனா தொற்று அதிகரிக்க வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்களே காரணம். கடந்த ஆண்டு முழு ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. பெரும்பாலான மக்கள் வேலைகளை இழந்துள்ள நிலையில், மின்கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். 10 மற்றும்12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்தாக்கரே தெரிவித்தார்