Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

எங்கள் போராட்டம் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரானது அல்ல: நக்சல் அமைப்பு விளக்கம்

ராய்ப்பூர்

தங்களின் போராட்டமும், சண்டையும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரானது கிடையாது என்று நக்சல் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் - சுக்மா எல்லைப் பகுதி யில் நக்சல்களுக்கும், சிஆர்பிஎப் - ஆயுதப் படை போலீஸார் அடங்கிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாப்புப் படையினர் 22 பேர் வீரமரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்த் தியாகம் வீண்போகாது என்றும், நக்சல்களை பூண்டோடுஒழிப்பதற்கான வாய்ப்பை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், நக்சல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபய் என்பவர் சார்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நக்சல்களை பழிவாங்கப் போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி யிருக்கிறார். யாரிடம் இருந்து இந்த பழிவாங்கும் படலத்தை அவர் தொடங்க போகிறார்? நக்சல்களிடம் இருந்தா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்தா? ஏனெனில், நக்சல்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுதான். மத்தியில் ஆட்சிப்புரியும் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நாள்தோறும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த சமயத்தில், ஒரு விஷயத்தை நக்சல் அமைப்பு தெளிவாக்க விரும்புகிறது. அதாவது, எங்களின் போராட்டமும், சண்டையும் அரசாங்கத்துக்கு எதிரானதே ஒழிய, பாதுகாப்புப் படையினருக்கு எதிரானது கிடையாது. பாதுகாப்புப் படையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால், எங்களைக் கொல்லும் நோக்கில் ஆயுதங்களை ஏந்தி வருபவர்களுடன் சண்டை யிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தச் சண்டையில் அவர்கள் உயிரிழக்கும்போது, அவர்களின் குடும்பத்தினரை நினைத்து நாங்கள் மிகவும் வேதனைப்படுவோம்.

ஆதலால், பாதுகாப்புப் படைகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என மக்களிடம் நக்சல் அமைப்பு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x