

வரும் 2047-ம் ஆண்டில் புதிய இந்தியா உருவாகும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி காந்தியடிகளின் தண்டி யாத்திரையை நினைவுகூரும் நிகழ்ச்சி குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் கடந்த மார்ச் 12-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். அன்றைய தினம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 81 பேர் தண்டி யாத்திரையை தொடங்கினர். அவர்கள் தண்டியில் நேற்று தங்களது யாத்திரையை நிறைவு செய்தனர்.
இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 1947-ம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்தது. அதன்பிறகு சுதந்திர போராட்ட தலைவர்களின் அடிச்சுவட்டில் நடந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம். இப்போது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நேரத்தில் இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்து அங்கீகரித்துள்ளது. இதற்காக உழைத்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது புதிய இந்தியா உருவாகும். அடுத்த 25 ஆண்டுக்குள் நமது நாடு அபரித வளர்ச்சி பெறும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகிறேன்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்டோர் நமக்கு முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களின் வழியில் நடந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.