

நிதிஷ் கடாரா கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு மரண தண்டனை கோரும் டெல்லி அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி டி.பி. யாதவின் மகள் பாரதி. அவரை நிதிஷ் கடாரா என்பவர் காதலித்துள் ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதியின் சகோதரன் விகாஸ், உறவினர்கள் விஷால், சுக்தேவ் ஆகியோர் நிதிஷ் கடாராவை கடத்தி கொலை செய்தனர்.
இவ்வழக்கில், விகாஸ், விஷால் இருவருக்கும் தலா 30 ஆண்டு சிறை தண்டனையும், சுக்தேவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை உறுதி செய்து, தண்டனைக் காலத்தை, முழுமையாக சிறையில் கழிக்க உத்தரவிட்டது.
நிதிஷின் தாய் நீலம் கடாரா, குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், டெல்லி அரசு சார்பில், குற்றவாளிகள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர். பானுமதி ஆகியோ ரடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. ஏற்கெனவே இதேபோன்ற நீலம் கடாராவின் மனுவை நிராகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரிதினும் அரிதான வழக்கு அல்ல என்பதால் மரண தண்டனை விதிக்க முடியாது; தற்போது அளிக்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறையே போதுமானது எனத் தீர்ப்பளித்தனர்.