

பாரீஸில் நடைபெறவிருக்கும் வானிலை மாற்ற விவகாரம் குறித்த மாநாட்டில் ‘இந்தியா ஒரு சவால்’ என்று அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி கூறியதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜான் கெரியின் இத்தகைய விவரிப்பு "தேவையற்றதும் நியாயமற்றதும்" ஆகும் என்று பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்ற விளைவுகளைத் தடுப்பது, கரியமில வாயு வெளியேற்றத்தை கடுமையாகக் குறைப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவது ஒரு பெரிய சவால் என்று முன்னணி சர்வதேச வணிக நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஜவடேகர், “இந்தியா ஒரு சவால் என்று தெரிவிப்பது ஒரு விதத்தில் நியாயமற்றது. இந்த கூற்று இந்தியாவுக்கு நியாயம் வழங்காது. அமெரிக்கா நமது சிறந்த நண்பர், மற்றும் பாதுகாப்பு கூட்டாளி. அவரது (கெரி) கருத்து நியாயமற்றது. மாறாக வளர்ந்த நாடுகளே பாரீஸ் வானிலை மாற்ற மாநாட்டில் பெரிய சவால்.
வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியாவுக்கு இது தொடர்பாக எந்த வித நெருக்கடியும் இல்லை. மேலும், எந்த ஒருநாட்டிடமிருந்தும் அழுத்தத்தை ஏற்பவர்களும் அல்ல நாங்கள்.
வானிலை மாற்றம் சுற்றுச்சூழல், புவி வெப்பமடைதல், கரியமில வாயு வெளியேற்றம் ஆகியவை குறித்து உலகளாவிய ஒரு ஏற்பாட்டுக்காக நாம் அனைவரும் முனைப்பு காட்டி வரும் போது, எல்லா நாடுகளுமே தங்களது பிரச்சினைகளை முன் வைக்கும். எனவே கருத்தொருமித்தலை நாம்தான் கொண்டு செல்ல வேண்டும். இந்தியா எப்போதும் கருத்தொருமித்தல் பக்கத்தில் இருக்கும் நாடு. நாங்கள் உடன்பாட்டு ரீதியாக கருத்தொருமித்தலை கொண்டு வருபவர்கள். நாங்கள் மறுப்பு தெரிவிப்பவர்கள் அல்லர். கருத்தொருமித்தலுக்கு உதவுபவர்களே தவிர, சமரசம் செய்து கொள்பவர்கள் அல்ல”
இவ்வாறு கூறினார் ஜவடேகர்.
ஜான் கெரி தனது பேட்டியில், “இந்தியாவை மைய நீரோட்டத்துக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறோம். வானிலை மாற்றம் குறித்த புதிய சிந்தனை-செயல் மாற்றத்துக்கு இந்தியா எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது. எனவே இது ஒரு பெரிய சவால்” என்றார்.
இதுவே தற்போது ஜவடேகரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.