

கேரள மாநிலத்தில் நடந்துவரும் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், இன்னும் 3 முதல் 4 சதவீதம் வரை வாக்குப்பதிவு உயர வாய்ப்புள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று வெயில் அதிகம் அடித்தது. பிற்பகலுக்குப் பின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இருப்பினும் மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மாலை 6 மணி நிலவரப்படி 68 சதவீத ஆண்கள், 67 சதவீதப் பெண்கள், 32 சதவீதம் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகின. அதேபோல தென் மாவட்டங்களான பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகின.
ஒருசில இடங்களில் மட்டுமே மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மற்ற வகையில் வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்தது.
குறிப்பாக தர்மடம், அரூர், சேர்த்தலா, வடக்கன்சேரி, கருநாகப்பள்ளி தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மற்ற தொகுதிகளை விட இங்கு வாக்கு சதவீதம் அதிகரித்தது.
நண்பகலுக்குள் வந்து முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் தொகுதியில் தேர்தல் அதிகாரி முகமது அஷ்ரப் என்பவரை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறிது நேரம் தேர்தல் நிறுத்தப்பட்டு, புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.