45 வயதுக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பணியாளர் நலத்துறை அறிவுறுத்தல்

45 வயதுக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பணியாளர் நலத்துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

45 வயதுக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தும், சீரம் மருந்து நிறுவனத்துடன் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

2-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் அதாவது இணை நோய்கள் இருப்போர் இல்லாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இணை நோய்கள் இருப்போர் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்தது. அதன்படி அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே 45 வயதுக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை வெளியி்ட்டுள்ள அறிவிப்பில் ‘‘நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களில் 45 வயதுக்கும் அதிகமானாவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி அவசியமானது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in