கர்மாவிலிருந்து தப்பிக்க முடியாது: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: கோப்புப்படம்
Updated on
2 min read

கர்மா என்பது ஒருவரின் செயல்பாடுகளின் ஆவணம். கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில், அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன.

அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 ரஃபேல் போர் விமானங்களும், 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்களும், 4-வது கட்டத்தில் 3 விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் வந்துள்ளன.

இந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சியும், எம்.பி. ராகுல் காந்தியும் தொடர்ந்து மத்திய அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தினர்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் ஊடங்களில் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில், “இந்திய அரசு ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் இடைத்தரகருக்கு 11 லட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்தியையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் பாஜக மறுத்துவிட்டது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியுள்ளார். அதில், “ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்காக இடைத்தரகரிடம் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. கர்மா- ஒருவரின் செயல்பாடுகளின் ஆவணம். இந்த கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரோ வெளியிட்ட அறிக்கையில், “36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக இடைத்தரகருக்கு 10 லட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதமாக இந்த ஒப்பந்தம் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 2017-ம் ஆண்டு டசால்ட் நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சந்தேகம் இருப்பதாலும், ஏதோ மறைக்கப்படுவதாலும், இதில் விசாரணை நடத்த நரேந்திர மோடி அரசு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது குறித்து சிஏஜி அறிக்கையிலும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in