

இந்தியாவில் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கரோனா வைரஸ் பாதிப்பின் மூலம் 50 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியதாக வெளியான தகவல் உண்மையில்லை. அது வதந்தி என்று உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தீவிரமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த கரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டத்தை எட்டி நேற்று முன்தினம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களாக சராசரியாக 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்படி, “ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனா மூலம் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது” எனத் தகவல் வெளியானது.
இந்தச் செய்தி குறித்து, உலக சுகாதார அமைப்பு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிரிவு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனாவில் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்ற செய்தி பொய்யானது. இதுபோன்ற எந்த எச்சரிக்கையயும் நாங்கள் வெளியிடவில்லை” என விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகளுக்கு இந்தியா கரோனா தடுப்பூசி அனுப்பி வரும் செயலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் கடந்த பிப்ரவரி மாதம் பாராட்டியிருந்தார்.
அதில், “தடுப்பூசிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசியை வழங்கி வரும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது. மற்ற நாடுகளும் இந்தியாவின் செயலைப் பின்பற்ற வேண்டும்” எனப் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.