ஒரே நாளில் 43 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: இந்தியா சாதனை

ஒரே நாளில் 43 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: இந்தியா சாதனை

Published on

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் புதிய சாதனையாக, கடந்த 24 மணி நேரத்தில் 43 லட்சம் தடுப்பூசிகள் போட்டு இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை நாட்டில் ஒரே நாளில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையில் இது மிக அதிகம்.

80-வது நாளான நேற்று, 43,00,966 தடுப்பூசிகள் போடப்பட்டன. 39,00,505 பயனாளிகள் முதல் டோஸ் தடுப்பூசியும், 4,00,461 பயனாளிகள் 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர்.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் போடப்பட்ட கோவிட் 19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று 8.31 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 8,31,10,926 தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை 25 கோடியை கடந்து விட்டது.

நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 96,982 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.04 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழகம், தில்லி, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கோவிட் பாதிப்பு 47,288-ஆக உள்ளது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 7,88,223. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 6.21 சதவீதம்.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,17,32,279-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 50,143 பேர் குணமடைந்தனர். 446 பேர் உயிரிழந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in