

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் விதிகளை மீறியதாக, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி மீது பாஜக புகார் கூறியுள்ளது. இதன் மீதான மனுவை அக்கட்சி மத்திய சிறுபான்மைநலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.
பாஜகவின் அந்த புகார் மனுவில் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸும் செய்த பிரச்சாரங்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில், முதல்வர் மம்தா, முஸ்லிம் வாக்குகளை தம் திரிணமூல் காங்கிரஸுக்கு எனக் குறிப்பிட்டு கேட்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரை அளித்த அமைச்சர் நக்வியுடன் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் மற்றும் கட்சியின் செயலாளரான சுனில் தியோதர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நக்வி கூறும்போது, ‘‘மதரீதியாக வாக்கு கோரி தேர்தல் விதிகளை மீறியதுடன், இந்திய பிரதிநித்துவச் சட்டம் 1951 ஐயும் மம்தா மீறியுள்ளார்.
இதனால், மம்தா மீதும் அவரது கட்சி மீதும் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இதனால், வாக்குப்பதிவின் போது வன்முறை ஏற்படவும் வாய்ப்புள்ளதால் கூடுதலானப் பாதுகாப்பு படையினரை அமர்த்தவும் கோரியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
இதேபோல், திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் மீது பாஜக தனியாகப் புகார் அளித்துள்ளது. இதில் அவர் பிரதமர் நரேந்தர மோடியை தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் நக்வி கூறும்போது, ‘‘தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி தனது பை நிறைய ரூபாய் நோட்டுகளை அள்ளிக்கொண்டு வந்ததாகவும் தவறாகப் பேசியுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.