சிஏஏ, வேளாண் சட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டு பரப்பப்படுகிறது. நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது, ஆதலால் பாஜக தொண்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக தொடங்கப்பட்டு இன்றுடன் 41-வது ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பாஜக தொண்டர்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது. விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படும், சிலரின் குடியுரிமை பறிக்கப்படும், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று சில தனிநபர்களும், அமைப்புகளும் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன.

எங்கள் அரசு உருவாக்கிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தொழிலாளர் சட்டம் ஆகியவை பற்றி தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இதற்கு பின்னணியில் திட்டமிட்ட அரசியல் இருக்கிறது, மிகப்பெரிய சதி நிரம்பி இருக்கிறது. மக்களிடையே தவறான புரிதலை உருவாக்கி, அச்சத்தை பரப்பி, நாட்டில் அரசியல் நிலையற்றத் தன்மையை உருவாக்க இலக்கு வைத்துள்ளார்கள்.

இவையெல்லாம் பாஜக தொண்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதுபற்றி நமது கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த சட்டங்கள் குறித்தும், பாஜக அரசு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும்.

பாஜக தேர்தலில் மட்டும் வெற்றி பெறும் கட்சி, இரட்டை நிலைப்பாடு கொண்டது என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றன. ஆனால், தாங்கள் தேர்தலில் வென்றால் மட்டும் அதை புகழ்கிறார்கள்.

இந்திய மக்களின் அரசியல் முதிர்ச்சியையும், ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியினர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. குடிமக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் எதையும் எதிர்க்கட்சியினர் உற்சாகப்படுத்த மாட்டார்கள்.

பாஜக 5 ஆண்டுகளாக நேர்மையான ஆட்சியாலும், சேவையாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து மக்களின் இதயத்தை வென்று வருகிறது. ஏழைகளுக்கு ஏற்ற திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்ததால்,ஏழைகளும், கிராமங்களில் உள்ள மக்களும் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஏழை மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in