திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் 4 இவிஎம் இயந்திரங்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டில் 4 மின்னணு வாக்கு இயந்திரங்களும், ஒரு வாக்குப்பதிவு தணிக்கை எந்திரமான விவிபாட் இயந்திரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹவுரா மாவட்டத்தில் உள்ள உலுபேரியா உத்தர சட்டப்பேரவைக்கு உட்பட்ட துள்சிபேரியா எனும் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், “ ஹவுரா மாவட்டம், உலுபேரியா சட்டப்பேரவைக்கு உட்பட்ட துள்சிபேரியா எனும் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன் தேர்தல் ஆணையத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் அதிகாலையில் நின்றிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். செக்டார் 17 பகுதி அதிகாரி தபான் சர்க்காருக்கு சொந்தமான வாகனம் என்பதை மக்கள் அறிந்து தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், திரிணமூல் காங்கிஸ் நிர்வாகி வீட்டிலிருந்து 4 இவிஎம் இயந்திரங்கள், ஒரு விவிபாட் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். செக்டார் 17 அதிகாரி தபான்சர்க்காரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட 4 இவிஎம் இயந்திரங்களும் 3-ம் கட்டத் தேர்தலில் பயன்படுத்தப்படவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளோம் ” எனத் தெரிவித்தனர்.

செக்டார் அதிகாரி தபான் சர்க்கார் பணி முடிந்து மிகவும் தாமதமாக வந்துள்ளார், வாக்கு மையங்கள் பூட்டப்பட்டுவிட்டன. பாதுகாப்பான இடம் ஏதும் இல்லாததால், உறவினர் வீட்டில் தங்க முடிவு செய்தார். அதன்படி, திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் அதிகாரி தங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துள்சிபேரா கிராமத்தில் மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அங்கு அதிகமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர் சிரன் பேரா கூறுகையில் “ தேர்தலை சீர்குலைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் திட்டம்” எனக் குற்றம்சாட்டினார். பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் “ திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பழக்கம் இதுதான் தெரிந்துவிட்டது. அவர்களின் பிறவிப் பழக்கத்தை கைவிட அதிகமான காலமாகும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in