

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். இவரின் நியமனம், வரும் 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து புதிய நீதிபதிக்கான உத்தரவை குடியயரசுத் தலைவர் பிறப்பித்தார்.
புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமீபத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கக் கோரியிருந்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக அந்தப் பதவியில் யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வார்.
இது பெரும்பாலும் மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கவே பரிந்துரை செய்யப்படும். அவர் தகுதியானவராக இருந்தால், அவரையே தலைமை நீதிபதியாக நியமிக்கக் குடியரசுத் தலைவருக்குப் பிரதமர் பரிந்துரை செய்வார். அதை ஏற்று, குடியரசுத் தலைவரும் நியமன உத்தரவைப் பிறப்பிப்பார்.
இதன்படி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்துவரும் என்.வி.ரமணாவை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என பரிந்துரை செய்து கடந்த இரு வாரங்களுக்கு முன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பியது.
மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். என்.வி.ரமணா வரும் 24-ம் தேதி முறைப்படி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதிவரை என்.வி.ரமணா பதவியில் இருப்பார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதியாக ரமணா என்பது குறிப்பிடத்தக்கது
உச்ச நீதிமன்றத்தில் மிக மூத்த நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா, கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பொன்னாவரம் எனும் கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வழக்கறிஞராக என்.வி.ரமணா தன்னை பதிவு செய்து கொண்டார்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.