

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 2.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 140 தொகுதிகளில் 14 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். இதில் 2 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 400 துணை ராணுவப் படையினர், 2400 போலீஸ் அதிகாரிகள், 1600 சிறப்பு அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 200 வாக்குசாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ மேன் ஸ்ரீதரன் வாக்களிப்பு
அண்மையில், பாஜகவில் இணைந்த மெட்ரோ மேன் ஸ்ரீதரன் காலையில் முதல் ஆளாக வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பாஜகவில் இணைந்துள்ளது மாநிலத்தில் அக்கட்சிக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது என்றும் இத்தேர்தலில் பாஜக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.