கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை: நில மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை: நில மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான நில மோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடகமுதல்வராக எடியூரப்பா இருந்தபோது பெங்களூருவில் அரசு கையகப்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை விதிமுறையை மீறி விடுவித்தார். அந்த நிலத்தை தனது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன்குமார் ஆகியோருக்கு நெருக்கமான தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கி மோசடி செய்த‌தாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தன் மீதான புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி எடியூரப்பா மனு தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் எடியூரப்பா மீதான விசாரணைக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து வழக்கின் புகார் மனுதாரர் அலாம் பாஷா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “பொது ஊழியரான எடியூரப்பா விதிமுறைகளை மீறி நிலத்தை விடுவித்தது குற்றப்பத்திரிக்கையில் சாட்சியங்களோடு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு நீதிமன்றம் அவர் மீதும் குடும்பத்தினர் மீதும் குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளின்படி விரைந்து விசாரிக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து எடியூரப்பா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நில மோசடி வழக்கில் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என்ற‌ கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆணை குற்றவியல் நடைமுறை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. எனவே அந்த ஆணைரத்து செய்யப்படுகிறது. போதியஆதாரங்கள் இல்லாத நிலையில்எடியூரப்பா, அவரது மகன்கள்ராகவேந்திரா, விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது''என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எடியூரப்பா வரவேற்றுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in