இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.60 கோடி லஞ்சம்: ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.60 கோடி லஞ்சம்: ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு
Updated on
2 min read

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ்நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் சுமார் ரூ.8.60 கோடியைதஸ்ஸோ நிறுவனம் இந்திய இடைத்தரகருக்கு லஞ்சமாக அளித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸிலிருந்து வெளியாகும் மீடியாபார்ட் என்ற புலனாய்வு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டியுள்ளது. இவ்விதம் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் மீது மற்றொரு ராணுவ பேர வழக்கில் அன்னியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஜெட் போன்று 50 மாதிரிகளை உருவாக்க இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டதாக தஸ்ஸோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அவ்விதம் 50 மாடல்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. அவ்விதம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

ரஃபேல் பேரம் தொடர்பாக முதலில் அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறை ஏஎப்ஏ தகவல்களை வெளியிட்டது. ரஃபேல் நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்தது. ஆனால் அந்த அறிக்கையை வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஆவணமாக பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை.

2017-ம் ஆண்டு ஆவணங்களை தணிக்கை செய்தபோது வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கியதற்காக செலவிட்ட தொகை என 5,08,925 யூரோக்கள்கணக்கில் காட்டப்பட்டிருந்ததாக ஏஎப்ஏ கண்டுபிடித்தது.

இந்தியாவைச் சேர்ந்த சுஷேன் குப்தா என்பவருக்குச் சொந்தமான டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இவர்மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

டெப்சிஸ் நிறுவனம்

இந்தியாவில் தஸ்ஸோ நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரராக டெப்சிஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சுஷேன் குப்தா மீது ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஏஎப்ஐ அறிக்கையை ஆய்வு செய்த மீடியாபார்ட் நிறுவனம் வழக்கமாக அளிக்கப்படும் நன்கொடைக்கு மாறாக மிகப் பெரிய அளவில் டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு மார்ச் 30, 2017-ல்தொகை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மொத்த ஆர்டர் தொகையில் 50 சதவீதமான 10,17,850 யூரோ தொகை (ரூ.8.6 கோடி) ரஃபேல் மாதிரி (டம்மி) உருவாக்கத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாடல் விலையும் 20 ஆயிரம் யூரோவாகும்.

ஆனால் மாதிரி ரஃபேல் விமானங்கள் தயாரித்தது தொடர்பான ஆவணங்களோ அல்லது அது பற்றிய தகவல்கள் எதையும்தஸ்ஸோ நிறுவனம் அளிக்கவில்லை. ஆனால் இந்தத் தொகையானது வாடிக்கையாளருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழலை மறைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு உரிய விளக்கத்தை இப்போது அளிக்குமாறு மீடியாபார்ட் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணை நடத்த வேண்டும்

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, “பிரான்ஸைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு நிறுவனமான ஏஎப்ஏ 2016-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும், இதில் 11 லட்சம் யூரோக்கள் டெப்சிஸ் சொல்யூஷன் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் அறிக்கை மூலம்கண்டறிந்தது. அதில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வாங்கியதற்கான தொகையாக 11 லட்சம்யூரோ குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in