Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

மாதம் ரூ.100 கோடி வசூலிக்க சொன்ன விவகாரம்; மகாராஷ்டிர அமைச்சர் தேஷ்முக் ராஜினாமா: சிபிஐ விசாரணைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் மர்ம கார் ஒன்று நிறுத்தப்பட்டி ருந்தது. பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்ததால், போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் பணியிடம் மாற்றப்பட்டார்.

முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்படிருந்த காரை, மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்த வழக்கில் சச்சின் வாஸை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், பணி மாற்றம் செய்யப்பட்ட மறுநாளே முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம் பிர் சிங் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘‘மும்பையில் உள்ள பார்கள், ரெஸ்டாரன்டுகள் உட்பட நிறுவனங்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி வசூலித்து தரவேண்டும் என்று போலீஸ் அதிகாரி சச்சின் வாஸை உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார். அத்துடன் சட்டவிரோதமாக போலீஸாரின் பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக நிர்பந்தப்படுத்தினார்’’ என்று பரம் பிர் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி வந்தார்.ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் அனில் தேஷ்முக் திட்டவட்டமாக மறுத்துவந்தார்.

இதற்கிடையில், பரம் பிர் சிங் உட்பட சிலர், அனில் தேஷ்முக்விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரூ.100 கோடி வசூலிக்க சொன்ன விவகாரம் தொடர்பாக 15 நாட்களுக்குள் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அனில் தேஷ்முக் நேற்று கூறும்போது, ‘‘மகாராஷ்டிர உள்துறைஅமைச்சராக நீடிக்க விரும்பவில்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

பவார் உதவியாளர்

அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ததை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் உதவியாளர் திலீப் வால்ஸ் பாட்டில், மகாராஷ்டிராவின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். அம்பேகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ.வாக உள்ள திலீல், தற்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இவருடைய தந்தையும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ.வுமான தத்தாத்ரே வால்ஸ் பாட்டிலும், சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x