

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டில் கரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 93,249 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 513 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா 2-வது அலை என்று மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 2-வது அலை வந்துவிட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்து வேண்டும், மக்களுக்கு கரோனா ஆர்டிபிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைப் போடவும் மத்திய அரசு அறிவுறுத்தி, அதை வேகப்படுத்தவும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் நாட்டில் அதிகரித்து வருவது குறித்தும், கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்தும் அறிய பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.