

ஊடகவியலாளரை தரக்குறைவாகப் பேசியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒரு வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகிறது. இது போலியானது என அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
பாஜக ஆளும் உ.பி. அரசின் முதல்வரான யோகி இன்று கரோனாவிற்கானத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதன் மீது அவர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியும் அளித்திருந்தார்.
இதில் ஏதோ காரணத்திற்காகக் கோபமடைந்தவர் அந்த செய்தி ஊடகத்தின் கேமராமேனை தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இக்கட்சியுடனான ஒரு வீடியோ பதிவு சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இதன் மீது உ.பி.யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் விமர்சித்துள்ளார். இதன் வீடியோவை பகிராமல் தனது கருத்தை மட்டும் டிவீட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் அகிலேஷ்சிங் குறிப்பிடுகையில், ‘‘ முதல்வர் ஒரு பத்திரிகையாளர் மீது பயன்படுத்தும் இனிய வார்த்தைகளை தயவுசெய்து கேளுங்கள். ஆனால், இதை குழந்தைகள் காதுகளில் கேட்டுவிடாதபடி அவர்களை தூரவைத்து கேளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அகிலேஷால் விமர்சிக்கப்பட்ட இந்த வீடியோ போலியானது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் யோகியின் மீடியா ஆலோசகரான ஷலாப் மணி திரிபாதி பெயரில் வெளியாகி உள்ளது.
அதில் ஷலாப் மணி குறிப்பிடும் போது, ’‘அந்த வீடியோவின் கடைசி மூன்று நிமிடங்களின் ஒலி புனையப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோவை வெளியிட்ட ஊடகங்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், முதல்வர் யோகியின் ஐந்து நிமிட வீடியோ உ.பி.வாசிகள் இடையே சமூகவலைதளங்களில் வைரலாவது தொடர்கிறது.