மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல்; மகாராஷ்டிராவில் சர்ச்சையில் சிக்கிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

அனில் தேஷ்முக் - கோப்புப் படம்
அனில் தேஷ்முக் - கோப்புப் படம்
Updated on
1 min read

மகாராஷ்டிராவில், மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்ன சர்ச்சையில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ-வும் விசாரித்து வருகின்றன.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் அண்மையில் ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அதில், “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக் கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என கூறியிருந்தார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்ட ம் நடத்தி வருகின்றன.

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து மனு அளித்தனர். சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவியில் தொடரக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். ஆனால் முறைகேடு புகாரை அனில் தேஷ்முக் மற்றும் அவரது கட்சி்த் தலைவரான சரத் பவாரும் மறுத்து வந்தனர். ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே அனில் தேஷ்முக் மீது அதிருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் அனில் தேஷ்முக் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பி வைத்தார். அதனை உத்தவ் தாக்கரேயும் ஏற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in