Last Updated : 05 Apr, 2021 09:57 AM

 

Published : 05 Apr 2021 09:57 AM
Last Updated : 05 Apr 2021 09:57 AM

நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 478 பேர் பலி: தொற்று பாதிப்பில் உலகளவில் முதலிடம்

நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் முதல் கரோனா பாதிப்பு உறுதியனாது. இதன் காரணமாக கடந்த மார்ச்சில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 2021 ஜனவரி இறுதியில் நாடு முழுவதுமே கரோனா தொற்று ஓரளவுக்கு குறையத் தொடங்கியது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்நிலையில், பிப்ரவரி பாதியிலிருந்து கரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 3500 என்ற அளவை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நாட்டில் முதன்முறையாக அன்றாட தொற்று எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,25,89,067 என்றளவில் உள்ளது.

அதேபோல் ஒரே நாளில் 478 பேர் கரோனா தொற்றால் பலியாகினார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,074 பேருக்கு தொற்று உறுதியானது. மும்பையில் மட்டும் 11,163 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. மும்பை நகரில் இதுவரை 4,52,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 7 கோடியே 91,05,163 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, கரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பரிசோதானை, தொற்று தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, கோவிட் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி என 5 வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டது எனப்து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x