

டி மார்ட் எனப்படும் சங்கிலித் தொடர் நிறுவனங்களின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி மும்பையில் ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். தனது சகோதரருடன் இணைந்து இந்த பங்களாவை அவர் வாங்கியுள்ளார்.
சமீப காலங்களில் வீடு சார்ந்த ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் மிகப் பெரிய தொகை இதுவாகும்.
தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள மதுகுஞ்ச் எனும் இடத்தில் 2 தளங்களைக் கொண்ட இந்த பங்களா 61,916 சதுர அடி கொண்டதாகும். இந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.724 கோடியாகும். இந்த பங்களாவை வாங்க முத்திரைத் தாள் கட்டணமாக ரூ.30.03 கோடியை ஆர்கே தமானி செலுத்தியுள்ளார்.
தற்போது அல்டாமவுன்ட் சாலையில் உள்ள பிரித்வி அபார்ட்மென்ட் பகுதியில் தமானி மற்றும் அவரது சகோதரர் வசிக்கின்றனர். இதுவும் தெற்கு மும்பை பகுதியில் மிகவும் மதிப்பு மிகுந்த இடமாகும்.
இந்த பங்களாவை புராசந்த் ராய்சந்த் அண்ட் சன்ஸ் எல்எல்பிநிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளனர். இதற்கான பத்திரப் பதிவு மார்ச் 31-ம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.