Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

நந்திகிராமில் முறைகேடு நடைபெறவில்லை: மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

கொல்கத்தா

நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதிதேர்தலில் முறைகேடுகள் நடைபெறவில்லை. ஆதாரமின்றி புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், கடந்த 1-ம் தேதி இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இரண்டாம் கட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட போயல்வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல்வர் மம்தா பானர்ஜி, போயல் வாக்குச்சாவடிக்கு நேரில்சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியபோது, "உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களில் இருந்து சமூகவிரோதிகளை பாஜகவினர் அழைத்து வந்து வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர். இதற்குவாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்களும் உடந்தையாக இருந்தனர்" என்று குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக திரிணமூல் சார்பில் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர்கள் அஜய் நாயக், விவேக் துபே ஆகியோர் நேற்று முன்தினம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து முதல்வர்மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நந்திகிராம் தொகுதி, போயல் வாக்குச்சாவடியில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புகார் தொடர்பாக எவ்வித ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை.

முறைகேடுகள் நடைபெற்றதால் முதல்வர் மம்தா ஊடகங்களுக்கு பேட்டியளித்தது தவறான அணுகுமுறை. கட்சியின் முதல்வர் வேட்பாளரே, வாக்காளர்களை குழப்புவது, அமைதியை சீர்குலைப்பது தவறு.

போயல் வாக்குச்சாவடியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சிலர் கோஷமிட்டுள்ளனர். ஆனால் அங்கு எவ்வித வன்முறையும் நடைபெறவில்லை. ஆதாரமற்றபுகார்களை அளித்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடிதத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமாக பதில்அளிக்கப்படவில்லை. எனினும்திரிணமூல் செய்தித் தொடர்பாளர்குணால் கோஷ் கூறும்போது, "தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. இதுவரை 73-க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளோம். ஆனால் எந்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா கூறும்போது, "திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. அரசியல் சாசனம் மீதும் நம்பிக்கை கிடையாது. போயல் வாக்குச்சாவடியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. வன்முறையும் ஏற்படவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. முதல்வர் மம்தா வாக்குச்சாவடியில் இருக்கும்போது, அந்த வாக்குச்சாவடியை யாரால் கைப்பற்ற முடியும்? திரிணமூல் காங்கிரஸார் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x