Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

சமூகவலைதளங்கள் முடிவை தீர்மானிக்குமா?- பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் குழப்பத்தில் கேரள கட்சிகள்

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கட்சிகள் சமூகவலைதள பக்கங்களில் தனிக் கவனம் செலுத்தினர். அதிலும் பாஜக சமூகவலைதள பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. அது வாக்காக மாறுமா என அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தயாரித்த வீடியோக்கள், மீம்ஸ்களை பிரச்சாரத்தின் இறுதிநாளான நேற்று போட்டி,போட்டு சமூக வலைதளத்தில் பரப்பினர். நேற்று இரவு 7 மணி முதல் சமூகவலைதள பிரச்சாரத்துக்கும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளதால் நேற்று மாலையே அனைத்து வீடியோக்களையும் அரசியல் கட்சியினர் வெளியிட்டனர்.

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம்நிறைந்த மாநிலம் கேரளா. இங்குசமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சமூக வலைதளங்களில் தீவிர கவனம் செலுத்தின.

முகநூலில் முந்தும் பாஜக

சபரிமலை போராட்டத்துக்குப் பிறகு கேரள பாஜகவின் முகநூல் பக்கத்தை அதிகமான பேர் பின்தொடர்கின்றனர். சபரிமலை போராட்டத்தை நேரலை செய்தது இந்தப் பக்கத்தை அதிகம் பேர் பார்க்கவும், பகிரவும் காரணமாக அமைந்தது. கேரள பாஜகவின் முகநூல் பக்கத்தை அதிகபட்சமாக 7 லட்சத்து 16 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியை 6 லட்சத்து 72 ஆயிரம் பேரும், காங்கிரஸை 2 லட்சத்து 98 ஆயிரம் பேரும் முகநூலில் பின்தொடர்கின்றனர். இது கட்சியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே. முக்கிய தலைவர்களின் முகநூல் பக்கத்தின் அடிப்படையில் அலசினால் கேரள முதல்வர் பினராயி விஜயனை 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அதன் வாயிலாக ஆட்சி குறித்த கருத்துக்களை வெளியிட்டு வந்தார் பினராயி விஜயன்.

கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களைச் சந்திக்காத பினராயி விஜயன் முகநூலில் நேரலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். நிதித் துறை அமைச்சராக இருக்கும் தாமஸ் ஐசக்கை 7 லட்சத்து 25 ஆயிரம் பேரும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவை எட்டரை லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

இதேபோல் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவை 12 லட்சம் பேரும், காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை 14 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவர்கள் வெளியிட்ட கருத்துகளும், புகைப்படங்களும் அவர்களது ஆதரவாளர்களால் அதிக அளவில் பகிரப்பட்டன. தேர்தல் நேரடிபிரச்சாரம் முடிந்தாலும் இப்போதும் இந்த பதிவுகள் சாமானிய ஆதரவாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அசத்தும் மார்க்சிஸ்ட்

இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகம். மார்க்சிஸ்ட் கட்சியை 2 லட்சத்துக்கு 63 ஆயிரம்பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். காங்கிரஸை 48 ஆயிரம் பேரும், பாஜகவை 21 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

இந்தத் தேர்தலுக்காக கேரள காங்கிரஸ், 30 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியது. இந்த குழுக்களில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துவிட்ட நிலையில் சோசியல் மீடியா பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் கொள்கைகள், எதிர்க்கட்சி வேட்பாளர் வாக்குறுதி கொடுத்து செய்யாதது குறித்த சிறிய வீடியோக்கள் இந்தக் குழுக்களில் குவிந்துள்ளன.

குழுவில் இருப்பவர்கள் வீடியோக்களை பார்க்க உள்ளூர் காங்கிரஸாரால் டேட்டா உபயமும் நடக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்து புகழ்பெற்ற ஜோதி விஜயகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் இந்தப் பணிகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ், பாஜக இரண்டுமே கட்சி கடந்து பொதுமக்களுக்காகவும் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்துள்ளன.

காங்கிரஸ் சார்பில் வாட்ஸ் அப் குழுக்களின் அட்மினாக 24 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த யுத்தி கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸுக்கு பெற்றுக் கொடுத்ததை அந்த கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மார்க்சிஸ்ட் ஊடக பிரிவை கவனித்துக் கொள்ளும் டாக்டர் வி.சிவதாசன் கூறும்போது, ‘இந்த தேர்தலில் வாட்ஸ் அப்பில் நிறைய போலி செய்திகள் வந்தன. அதை உடைக்கவே அதிகநேரம் வேலை செய்தோம். நாங்கள் நேரடி பிரச்சாரத்தையும், மக்களை சந்திப்பதையுமே பெரிதும் நம்புகிறோம். அதேநேரத்தில் இன்றைய கால ஓட்டத்தில் சமூகவலைதள பிரச்சாரமும் முக்கியமானது’’என்றார்.

பாஜகவின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் கூறும்போது, ‘இந்த தேர்தல் களத்தில் 40 பேர் சமூகவலைதளங்களில் பணிசெய்தனர். அனைவரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். கேரள கட்சிகளிலேயே பாஜகவுக்குத்தான் முகநூலில் பலம் அதிகம். அதில் புதிய கேரளாஎன்னும் சிந்தனையைத் தூவியிருக்கிறோம். சபரிமலை பிரச்சினை தொடங்கி, கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில்மக்கள் அனுபவித்த துன்பங்களையும் அதிகம் பகிர்ந்தோம். அதேபோல் மெட்ரோமேன் தரன் மாதிரியிலான வளர்ச்சியையும் முன்வைத்தோம்’’ என்கிறார்.

திறந்தவெளி வாகன பிரச்சாரத்தையும், தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களையும் தாண்டி கேரளாவில் முகநூலில் ஆதிக்கம் செலுத்தியது பாஜகவின் முகநூல் பக்கம். அதேநேரம் வாட்ஸ் அப்பில் காங்கிரஸும், முக்கிய தலைவர்களின் தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் கோலோச்சின. சமூகவலைதளங்களை பின் தொடரும் இளைஞர்கள் கூட்டம் இதில் யாருடைய பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x