

டெல்லியில் இருந்து இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலன் ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவில் இருந்து இத்தாலி நாட்டுக்கு நேரடி விமான சேவையை இயக்க வேண்டும் என அந்நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதை ஏற்று, டெல்லியில் இருந்து இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலன் ஆகிய நகரங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. போயிங் 787 டிரீம்லைனர் விமானம் இதற்காக பயன்படுத்தப்படும்.
டெல்லி-ரோம்-மிலன்-டெல்லி என முக்கோண வழித்தடத்தில் இந்த விமானம் இயக்கப்படும். வாரந்தோறும் ஞாயிறு திங்கள், புதன், வெள்ளி, என 4 நாட்களுக்கு இவ்விமானம் செல்லும். இந்த விமானம் (எண். ஏஐ-123) டெல்லியில் இருந்து மதியம் 2.20க்கு புறப்பட்டு இரவு 7.05 மணிக்கு ரோம் நகரை சென்றடையும். ரோமில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மிலன் நகரை இரவு 10 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த விமானம் இரவு 11.30 மணிக்கு மிலன் நகரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு டெல்லி வந்தடையும்.
இதேபோல் டெல்லி-மிலன்-ரோம்-டெல்லி என்ற வழித்தடத்தில் இயக்கப்படும் விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 3 தினங்கள் இயக்கப்படும். இதன்படி, இந்த விமானம் டெல்லியில் இருந்து மதியம் 2.20க்கு புறப்பட்டு, இரவு 7.30க்கு மிலன் நகரை வந்தடையும். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10க்கு ரோம் நகரை வந்தடையும். அங்கிருந்து இரவு 11.35க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு டெல்லி வந்தடையும்.
இந்த விமான சேவை துவக்கப்பட்டுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கிடையே சுற்றுலா வளர்ச்சியடைவதோடு, பயணிகளுக்கு இரண்டு மூன்று விமானங்களில் மாறி மாறி செல்லும் சிரமம் குறையும். இந்தியாவில் இருந்து இத்தா லிக்கு (பிரம் அண்டு டூ) நேரடி விமான சேவையை இயக்கும் முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஏர் இந்தியா பெற்றுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.