Last Updated : 17 Jun, 2014 09:13 AM

 

Published : 17 Jun 2014 09:13 AM
Last Updated : 17 Jun 2014 09:13 AM

தேவகவுடா கட்சித் தலைவர்கள் 45 பேர் இலங்கை பயணம்: தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கின்றனர்

தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை செய்வதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் 45 பேர் திங்கள்கிழமை இலங்கைக்குச் சென்றனர்.

முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையில் 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள இவர்கள், வரும் வியாழக்கிழமை பெங்களூர் திரும்புகின்றனர்.

தொடர் இறங்குமுகம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்த்துப் போட்டியிட்டு, மதசார்பற்ற ஜனதா தளம் 3 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு, ‘20 மாதங்களுக்கு எச்.டி.குமாரசாமி முதல்வர், அடுத்த 20 மாதங்களுக்கு எடியூரப்பா முதல்வர்’ என்ற உடன்படிக்கையுடன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.

ஆனால் 20 மாதங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை மீறிய குமாரசாமி, முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுத்தர மறுத்துவிட்டார். இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

தொடர்ந்து 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது.

மேலும் கடந்த 2013 சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், இடைத் தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் தேவகவுடா கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதிலிருந்து கட்சியை மீட்க தேவகவுடா தனது மற்றொரு மகன் ரேவண்ணா, மருமகள் அனிதா குமாரசாமி, பேரன் நிகில் கவுடா என பலரையும் அரசியலில் இறக்கினார். ஆனால் யாராலும் கட்சியை காப்பாற்ற முடியவில்லை.

இந்நிலையில் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காகவும் முக்கியத் தலைவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் குமார சாமி தலைமையில் 45 பேர் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கொழும்பு புறப்பட்டனர். கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முன்னணி தலைவர்கள் பலரும் இக்குழுவில் உள்ளனர்.

கொழும்பில் உள்ள‌ நட்சத்திர விடுதியில் 2 நாட்களும், மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியில் 2 நாட்களும் தங்கும் இவர்கள் வரும்‌ 19-ம் தேதி மாலை பெங்களூர் திரும்புகின்றனர்.

ராஜபக்சேவை சந்திக்கவில்லை

முன்னதாக, இந்தப் பயணம் குறித்து ‘தி இந்து’விடம் குமாரசாமி கூறுகையில், “இலங்கைக்கு அரசுப் பயணமாக செல்லவில்லை. எனவே அங்குள்ள அரசியல்வாதிகளையோ, இலங்கை அதிபர் ராஜபக் சேவையோ சந்திக்கப் போவ தில்லை. முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவே செல்கிறோம்.

கொழும்பு மற்றும் கண்டி பயணத்துக்கு எங்கள் 45 பேருக்கும் ரூ. 14 லட்சம் மட்டுமே செலவாகிறது. இது டெல்லி செல்லும் செலவைக் காட்டிலும் குறைவு. எங்களைப் போன்ற ஏழைக் கட்சிகள் அமெரிக்காவுக்கோ லண்டனுக்கோ செல்ல முடியாது. கட்சியின் வளர்ச்சி நிதியிலிருந்து இந்த பயணத்துக்கு செலவு செய்கிறோம்.

இந்தப் பயணத்துக்கு பிறகு கட்சியில் பல அதிரடி முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக திட்டங்களை வகுக்க இந்தப் பயணம் உதவும். பெங்களூர் திரும்பிய பிறகு கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்துவோம்'' என்றார். இந்தப் பயணத்தை கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, ஒய்.எஸ்.வி.தத்தா, சாரதாபூர் விநாயக் ஆகியோர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x