மொழி அறிஞர் பாலசுப்பரமணியம் மறைவு; நான்கு மொழிகளுக்கு பேரிழப்பு: தமிழ் பேராசிரியர்கள் கருத்து

பாலசுப்பரமணியம்- கோப்புப் படம்
பாலசுப்பரமணியம்- கோப்புப் படம்
Updated on
2 min read

மொழி அறிஞரான பேராசிரியர் எச்.பாலசுப்பரமணியம்() நேற்று டெல்லியில் காலமானார். இவரது மறைவால் இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் பேரிழப்பாகும் என தமிழ் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் எச்.பாலசுப்பிரமணியம் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றதுடன் இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். மத்திய உள்துறை அமைச்சகத்திலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலும் இந்திப் பேராசிரியர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாம் பிறந்து வளர்ந்த திருவனந்தபுரத்தில் வாழ்ந்ததால் தமிழுடன் மலையாள மொழியையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்றவர்.

திருக்குறள் திருமந்திரம் திருமுறைகளைக் கவிதை வடிவில் இந்தி உலகுக்கு அறிமுகப்படுத்தியது பேராசிரியர் பாலசுப்பரமணியத்தின் சிறப்பு ஆகும். இவற்றை அருட்செல்வர் நா.மகாலிங்கம் அழகுற வெளியிட்டுள்ளார்.

பாரதியார் பாடல்கள் முழுமையையும் இந்தியில் கவிதை வடிவில் மொழியாக்கம் செய்து நிறைவு செய்துள்ளார். பணி ஓய்விற்கு பின் சிலகாலம் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்(ஜேஎன்யு) வருகைதரு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜேஎன்யுவில் ஓய்வுபெற்ற பேராசிரியரான கி.நாச்சிமுத்து கூறும்போது, ‘நன் ஒன்றாக ஜேஎன்யுவில் பணியாற்றிய போது, அவர் தொல்காப்பியம் முழுமையையும் என்னுடன் இணைந்து இந்தியில் மொழிபெயர்த்தார்.

கி.ராஜநாராயணன், தோப்பில் முகம்மது மீரான், அகிலன், ஜெயகாந்தன், நீல பத்மநாபன், வைரமுத்து முதலிய பலரின் படைப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்தவர்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக நெடிய மொழியாக்க அனுபவம் வாய்ந்த பேராசிரியர் பாலசுப்பரமணிய தொல்காப்பியம் முழுமையையும் இந்தியில் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்த பணியில் நானும் இணைந்திருந்தேன்.

இந்த மொழிபெயர்ப்பு மிக உயர்ந்த தரத்தில் இருப்பதாக இந்தி அறிஞர்கள் பாராட்டுவர் எனவும், இது வெளிவரும்போது தமிழின் பெருமை இந்தி மொழியாளர்களுக்குத் தெரிய வரும் என்று பாலசுப்பிரமணியன் என்னிடம் பெருமிதம் கொள்வது உண்டு.

இந்த நூலை அச்சு வடிவில் ஆக்கும்போது ஏற்பட்ட சில தடங்கல்களைச் சரிசெய்ய அவர் அச்சகம் முதலியவற்றிற்கு வெளியில் சென்றதாலே என்னவோ அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.’ என வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லியின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியின் இணைப்பேராசிரியர் ச.சீனிவாசன் கூறும்போது, ‘‘சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் பள்ளியில் பயிலும் போது சுதந்திரப் போராட்டச் சூழலில் தேசிய உணர்வினால் உந்தப்பட்டு அவர் இந்தியை விருப்பமுடன் கற்றார்.

இந்திய மொழிகளை இணைக்கும் பிராகிருத மூலம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். இதன் வாயிலாக வட, தென்னிந்திய மொழிகளிடையே ஒற்றுமைக் கூறுகளை நிறுவி பல்வேறு மொழி, இன மக்களிடையே நல்லுறவினை வளர்க்க இயலும் என பேராசிரியர் பாலசுப்பரமணியம் நம்பினார்.

இருபது ஆண்டுகள் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் அல்லாதவர்களுக்காகத் தமிழ் வகுப்புகளை நடத்தி வந்தார். அப்போது இவரது மாணவராகத் தமிழ்ப் பயின்ற காசிராம் சர்மா தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களை இந்தியில் மொழியாக்கம் செய்து அந்நூலினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.’’எனத் தெரிவித்தார்.

இந்தி மொழி அறிஞரான கோபிசந்த் நாரங்க் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களையும் தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர் பாலசுப்பரமணியம். இதற்காக அவருக்கு சாகித்திய அகாடமி நிறுவனம் மொழியாக்க விருது அளித்துச் சிறப்பித்தது.

இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் புதினங்கள்-கவிதைகளை இந்தியில் அறிமுகப்படுத்தியதற்காகக் கொழும்புத் தமிழ்ச் சங்கமும் லண்டன் இலக்கிய மன்றமும் இணைந்து இவருக்கு உயர் இலக்கிய விருது அளித்துச் சிறப்பித்துள்ளன.

மொழிப் பணிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதை, மத்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது. இவர், மலையாளத்திலிருந்தும் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் ’வேதங்களின் நாடு’ போன்ற பல நூல்களை இந்தியில் பெயர்த்துள்ளார்.

சென்னை புதுக்கல்லூரியிலும் விரிவிரையாளராகப் பணியாற்றியவருக்கு மகன் வெங்கடேஷ், மகள் உமா உள்ளனர். அவர் மனைவி பார்வதி முன்பே காலமாகிவிட்டார்.

அவருடன் உடன் பிறந்த தம்பிகள் இருவர், தங்கை ஒருவர் என அனைவருமே இந்திப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in