

கேரளா வலிமையான மதச்சார்பற்ற மாநிலம் என்பதால், மதரீதியாகப் பிளவுபடுத்த நினைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டம் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர பாஜகவும் தனது பங்கிற்கு இந்தத் தேர்தலில் இடங்களைக் கைப்பற்றத் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கண்ணூரில் முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கேரளா என்பது சிதைந்துபோன மாநிலம் எனும் தோற்றத்தைக் கட்டமைக்க காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள், பிரதமர் உள்பட முயன்றார்கள். கேரளாவில் நிர்வாகம் என்பதே இல்லை என்று பிரதமர் குற்றம் சாட்டினார்.
கேரளா என்பது மதச்சார்பின்மை கொண்ட வலிமையான மாநிலம். இங்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்த முயன்ற திட்டம் வெற்றி பெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சியைச் சிதைக்கவும், தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பேசினார்களோ அவர்கள்தான் இன்று மாநிலத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகிறார்கள். இதைப் பார்த்து நிச்சயம் கேரள மக்கள் கேலி செய்வார்கள்.
இந்த மாநிலம் சங்பரிவாரங்களின் வகுப்புவாத திட்டங்களுக்குச் சரண் அடையவில்லை என்பதால், கேரளாவுக்குப் பாடம் புகட்டவும், தண்டிக்கவும் சங்பரிவார் முயன்றது. ஆனால், கேரள மக்கள் தற்போது, எல்டிஎஃப் அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்து, காங்கிரஸ், பாஜகவை வழியனுப்பி வைக்கும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கேரள மாநிலம் சோமாலியாவுக்கு இணையாக இருந்தது. கேரள மாநிலத்தை மோசமாகச் சித்தரிக்க சங் பரிவாரத்துக்கு மட்டுமே விருப்பம்.
கேரளாவில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற மத்தியப் படைகள் வந்து உதவின. ஆனால், மத்திய அரசு அதன்பின் உதவி செய்தமைக்குக் கட்டணம் வசூலித்தது.
எங்களின் சொந்த ராணுவமான, மீனவர்கள், எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் சேவை செய்தார்கள். ஒரு பைசா கூட அரசிடம் இருந்து வாங்கவில்லை. கேரள அரசு அவர்களுக்குப் பணம் வழங்கியபோதிலும் மீனவர்கள் மறுத்துவிட்டார்கள்
கேரளாவில் 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வந்திருந்தபோது, கேரளாவில் பழங்குடி மக்களிடையே பச்சிளங் குழந்தை உயிரிழப்பு சோமாலியாவை விட மோசமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார். ஆனால், இன்று இந்தியாவிலேயே பச்சிளங் குழந்தைகள் இறப்பு குறைவாக இருப்பது கேரளாவில்தான்.
கேரளாவில் வரும் தேர்தலில் பாஜக ஒரு இடத்திலாவது வெற்றி பெறுமா அல்லது ஏற்கெனவே வைத்திருக்கும் வாக்கு எண்ணிக்கை சதவீதத்தைப் பெறுமா என்பது உறுதியில்லாமல் இருக்கிறது.
எத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை வெள்ளித்தட்டில் வைத்து பாஜகவிடம் வழங்கியிருக்கிறது. கேரள மாநிலத்தையும் பாஜகவிடம் வழங்குவோம் என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்''.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.