

உத்தரப்பிரதேசம் மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்த சிலைகள் ஆக்ரா கோட்டையின் மசூதி படிகளில் புதைக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் அயோத்தி வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2019 நவம்பரில் இதற்கு தீர்ப்பு வெளியானது. இதில் இந்துக்களுக்கு அங்கு ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது.
இதையடுத்து, அயோத்தியை போல் உ.பி.யின் காசி எனும் வாரணசியிலும், மதுராவிலும் தொடர்ந்து எழுப்பப்பட்ட விவகாரம் மீண்டும் அதன் நீதிமன்றங்களில் புதிய வழக்குகளாக தொடுக்க முயற்சிக்கப்படுகிறது.
இம்மனுக்கள் ஏற்கெனவே பலமுறை நிராகரிக்கப்பட்டன. இதற்கு காரணமாக மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அமலாக்கப்பட்ட ‘மதவழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ நீதிமன்றத்தால் சுட்டிக் காட்டப்பட்டு வந்தது.
இதன்படி, ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இருந்த வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் அதேநிலையில் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டது. எனினும், பல்வேறு வடிவில் காசி, மதுராவிலுள்ள மசூதிகளை இடிக்க, புதுப்புது வழக்குகளாக அம் மாவட்ட நீதிமன்றங்களில் தொடுக்கப்படுவது தொடர்கிறது.
இந்தவகையில், மதுராவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஐந்து பேர் கடந்த ஜனவரியில் ஒரு வழக்கு தொடுத்திருந்தனர். இவை மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ஆஜரான ஒரு மனுதாரர் மகேந்திர பிரதாப்சிங் அதில் ஒரு புதிய மனுவை அளித்துள்ளார். கிருஷ்ணஜென்மபூமி முக்தி
அந்தோலன் சமிதியின் வழக்கறிஞர் மகேந்திர அதில் ஒரு புதிய விவகாரத்தையும் எழுப்பியுள்ளார்.
இந்த மனுவில் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் குறிப்பிடுகையில், ‘‘பல்வேறு வரலாற்று பேராசிரியர்களின் கூற்றுப்படி, இங்கிருந்த தாக்கூர் கேசவ்தேவ் கோயிலை, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் இடித்துள்ளார்.
அப்போது கோயிலின் முக்கிய கிருஷ்ணர் மற்றும் இதர அலங்காரச் சிலைகளை ஆக்ரா கோட்டையிலுள்ள திவான் - எ காஸ் எனும் சிறிய மசூதியின் படிகளுக்கு கீழே புதைத்து வைத்துள்ளதாகவும் தகவல் பதிவாகி உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இவற்றை, இந்திய தொல்பொருள் ஆய்வகத்தினர் அல்லது உகந்த அதிகாரிகளின் மூலம் பத்திரமாக மீட்கக் கோரி தனது மனுவில் வலியுறுத்தி உள்ளார். மீட்கப்பட்ட சிலைகளை அறிவியல் ரீதியான ஆய்வகப் பரிசோதனைக்கும் அனுப்பி அறிக்கை பெற வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அந்த மனுவின் மீதான விசாரணையை நீதிபதி நேஹா பனோதியா, வரும் ஏப்ரல் 19 -ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ,
முக்கிய மனுவின் விவரம்
உ.பி.யின் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள கோயிலை கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தாவும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா மேனேஜ்மெண்ட் கமிட்டி ஆகியவை நிர்வாகித்து வருகின்றன.
இவ்விரண்டிற்கும் இடையே கடந்த 1968 -ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருக்கும் என்பது முக்கியமாக இருந்தது.
இந்த ஒப்பந்தத்தை, மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை 20, 1973 இல் ஏற்கப்பட்டு பதிவு செய்து செயல்பாட்டில் உள்ளது. இச்சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டது எனப் புகார் எழுப்பப்படுகிறது.
இதை ரத்து செய்து மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் ஜனவரியில் மனு அளிக்கப்பட்டது.
இதேபோன்று சமீபத்தில் வாரணாசியில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கும் அம்மாவட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது.