Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

புதிய வகை காய்கறியின் விலை கிலோ ரூ.1 லட்சம்: பிஹார் விவசாயி உற்பத்தி செய்து அசத்தல்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காய்கறி வகை ஒன்றை பிஹார் விவசாயி உற்பத்தி செய்து அசத்தியுள்ளார்.

பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் (38) வசித்து வருகிறார். விவசாயியான இவர், வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ‘ஹாப் ஷூட்ஸ்' என்ற காய்கறி வகையின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

தற்போது அவர் உற்பத்தி செய்துள்ள ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி வகை கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. இந்தப் பயிரின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது கனாபசீ குடும்ப வகையைச் சார்ந்தது. இதன் மலர், காய், கனி மற்றும் தண்டு ஆகிய அனைத்தும் பயனுள்ளவையாக இருப்பதால் இதற்கு இத்தகைய முக்கியத்தும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது பீர் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. காசநோய்க்கு இது இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. கூடவே தோல் பளபளப்பு தருவதாகவும், கவலை, சோர்வு, இன்சோம்னியா, மன அழுத்தம் போன்றவற்றுக்கும் நல்ல மருந்தாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு கூறும்போது, "கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்கும் ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி, இந்திய விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்" என்றார்.

இந்தியாவில் இப்போது இந்த காய்கறி தேவை அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் அதிக வருமானம் தரும் ஹாப் ஷூட்ஸ் விவசாயிகளுக்கு நம்பிக் கையும் உற்சாகமும் தருவதாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x