ஏழைகளுக்காக ரூ.1-க்கு இட்லி வழங்கும் கோவை ‘இட்லி அம்மா’வுக்கு வீடு: மஹிந்திரா குழுமம் கட்டிக் கொடுக்க முடிவு

கமலாத்தாள் பெயரில் நிலம் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கிய  மஹிந்திரா குழும ஊழியர்.
கமலாத்தாள் பெயரில் நிலம் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கிய மஹிந்திரா குழும ஊழியர்.
Updated on
1 min read

கோயமுத்தூரில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க முன்வந்துள்ளது.

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா 2 ஆண்டு களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில்ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்துவந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவு வைரலானதை அடுத்து ‘இட்லி அம்மா’கமலாத்தாள் பரவலாக அறியப்பட்டார். லாப நோக்கமில்லாமல் இதை செய்வதன் மூலம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் வயிறார சாப்பிட முடியும் என்று கமலாத்தாள் கூறினார். இதையடுத்து கோயமுத்தூரில் உள்ள பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது.

அதன்பிறகும் தொடர்ந்து மலிவான விலையில் உணவு வழங்கி வந்த கமலாத்தாள் சொந்தமான இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்த சேவையை வழங்க வேண்டுமென விரும்பினார். தற்போது அந்த விருப்பத்தையும் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்ற முன்வந்துள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்ய உதவியிருக்கிறது. மேலும் அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in