5 மாநில தேர்தல் நேரத்தில் எழும் புகார்கள்- கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது பாஜக மேலிடம் அதிருப்தி

5 மாநில தேர்தல் நேரத்தில் எழும் புகார்கள்- கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது பாஜக மேலிடம் அதிருப்தி
Updated on
1 min read

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமயத்தில் கர்நாடகஅமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தின் தொடக்கத் தில் ரமேஷ் ஜார்கிஹோலிக்கு ஆதரவாக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினர். இதை கையிலெடுத்த காங்கிரஸ், ‘பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என பிரச்சாரம் செய்தன.

இதனால் சுதாரித்த பாஜக மேலிடம், 5 மாநில் தேர்தல் நேரத்தில் ரமேஷ் ஜார்கிஹோலி மீது நடவடிக்கை எடுக்குமாறு எடியூரப்பாவுக்கு அறிவுரை வழங்கியது.

இதையடுத்து ரமேஷ் ஜார்கிஹோலியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவர் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரமேஷ் ஜார்கிஹோலியை கைது செய்யக்கோரி மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாஜக மேலிடத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது துறையில் முதல்வர் எடியூரப்பா அத்துமீறி தலையிடுவதாக ஆளுநர் வாஜுபாய் வாலா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏபசனகவுடா பட்டீல் யத்னால், “எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நிழல் முதல்வராக செயல்படுகிறார். இந்த குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே பாஜக மேலிடம் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக மேலிடத் தலைவர்கள் எடியூரப்பா மீது அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமார், “பாஜக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஜார்கி ஹோலி, ஈஸ்வரப்பா விவகாரத்தால் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படும்வகையிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாவதால் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in